×

உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கும் விவசாயிகள்: நலிந்துவரும் வேளாண்மையை பாதுகாக்க அரசு மானியம் அதிகரிக்கப்படுமா?

திருவண்ணாமலை: உரம் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் குறைந்து வரும் பருவமழை, எதிர்பாராத இன்னலை ஏற்படுத்தும் இயற்கைச் சீற்றம், சாகுபடி செலவு பன்மடங்கு உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, உழைப்புக்கேற்ற விலையின்மை, மின் பற்றாக்குறை, வளர்ச்சி திட்டம் எனும் பெயரில் பறிபோகும் விளை நிலம், மலடாகும் மண்வளம் போன்றவற்றால் நிலை குலைந்திருக்கிறது வேளாண் தொழில். இந்த பேரிடிகளின் தொடர்ச்சியாக, கடுமையான உரம் விலையேற்றம் இப்போது விவசாயிகளை விழிபிதுங்க வைத்திருக்கிறது.

கடந்த ஆண்டை விட தற்போது 15 முதல் 20 சதவீதம் வரை உரம் விலை உயர்ந்திருக்கிறது. தற்போது, யூரியா (40கி) 266, டிஏபி(50கி) 1,300 முதல் 1,450, பொட்டாஷ்(50கி) ₹950, கலப்பு உரங்களான 20:20:0:13(50கி) 1,000 முதல் 1,100, 17:17:17(50கி) 1,250, 16:20:0(50கி) ₹980,10:26,26(50கி) 1,250 முதல் 1,350, சூப்பர் பாஸ்பேட் (50கி) ₹475 என்ற விலையில் விற்கப்படுகிறது.கடந்த 2011ம் ஆண்டு, டிஏபி உரம்(50கி) 527 என்றிருந்தது. தற்போது, இதன் விலை இருமடங்காக உயர்ந்திருக்கிறது. அதேபோல், சூப்பர் பாஸ்பேட்(50கி) 165 என்றிருந்தது தற்போது மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது.மேலும், கடந்த 2011ம் ஆண்டு யூரியா(40கி) 155 என்றிருந்தது தற்போது இருமடங்காக உயர்ந்திருக்கிறது. கலப்பு உரம் (காம்ப்ளக்ஸ்) விலை அதிகபட்சம் 475 என்ற நிலையில் இருந்தது. தற்போது மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. மேலும், அமோனியம் சல்பேட், பேரம்பாஸ் போன்றவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதிக அளவில் பயன்படுத்தும் கலப்பு உரங்களின் விலை உயர்வு, விவசாயிகளை பெரிதும் பாதித்திருக்கிறது.சர்வதேச சந்தை விலை அடிப்படையில், உரம் விலையை மத்திய அரசு அறிவிக்கிறது. எனவே, உரம் விலையை தீர்மானிக்கும் இடத்தில், சர்வதேச அளவிலான பன்னாட்டு வர்த்த நிறுவனங்கள் உள்ளன. எனவே, விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உர மானியம் வழங்குகிறது.

ஆனால், மத்திய அரசு வகுத்துள்ள உர கொள்கை விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் பாதுகாப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், உர விலையேற்றத்துக்கு தகுந்தபடி அதற்கான மானியத்தை மத்திய அரசு உயர்த்துவதில்லை. எனவே, உர தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்துகிறது என்கின்றனர் விவசாயிகள்.மேலும், உரம், வேளாண் கருவிகள், இடுபொருட்கள் போன்றவற்றுக்கு அரசு வழங்கும் மானியம், உணவு உற்பத்தியை பெருக்க வழங்கப்படும் முதலீடு என அரசு கருத வேண்டும் என்கின்றனர். வேளாண்துறைக்கு வழங்கப்படும் சலுகைகள் விவசாயிகளுக்கானது என்ற எண்ணத்தை கைவிட்டு, விவசாயத்துக்கானது என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறும் பயிர் கடனில் பெரும்பகுதியை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருத்து, இடுபொருட்களுக்காகவே செலவிடுகின்றனர். அதனால், கடன் சுமையில் தவிக்கின்றனர். எனவே, உர மானியத்தை அரசு அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, விவசாயத்தை காப்பாற்ற முடியும்.

எனவே, விண்ணை முட்டும் உரம் விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. மத்திய அரசு வழங்குவதைபோல, மாநில அரசும் உர மானியம் வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் சலுகை விலையில் உரம் விற்பனை செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.மேலும், இயற்கை வேளாண் சாகுபடியை ஊக்கப்படுத்த, விவசாயிகளுக்கு சலுகைகளை அரசு வழங்க வேண்டும். இயற்கை முறை சாகுபடி வேளாண் விளை பொருட்களை, கூடுதல் விலைக்கு அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதோடு சந்தை வாய்ப்பை உருவாக்க வேண்டியதும் அவசியமாகும்.



Tags : prices ,risen sharply, Impoverished Farmers,poor agriculture?
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின்...